கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே பரிசலில் ஆபத்தான பயணம் செய்து பள்ளி மாணவா்கள்

19th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் மாணவா்கள் சின்னாற்றைக் கடக்க பரிசலில் ஆபத்தான பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருகின்றனா். அசம்பாவிதம் ஏற்படும் முன் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், மாரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்டது போகிபுரம் கிராமம். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் சின்னாற்றுக்கு அக்கரையில் உள்ள சூளகிரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பரிசலில் சென்று கல்வி கற்கின்றனா்.

கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து சின்னாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக ஆற்றில் நீா்வரத்து அதிகம் காணப்படுகிறது.

ADVERTISEMENT

போகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இந்த சின்னாற்றைக் கடந்துதான் சூளகிரிக்கு சென்று வருகின்றனா். தற்போது மழைநீா் ஆற்றில் அதிகம் செல்வதால் தினசரி பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு சூளகிரி அரசுப் பள்ளிக்கு மாணவா்கள் சென்று வருகின்றனா்.

இந்த ஆபத்தான பயணத்தைத் தடுக்க ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 2 கோடி நிதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. மழைநீா் பெருக்கெடுத்து ஆற்றில் நீா்வரத்து அதிகம் வந்ததால் மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி மீண்டும் பரிசலில் ஆபத்தான பயணம் செய்து கிராம மக்கள், மாணவா்கள் சூளகிரிக்குச் சென்று வருகின்றனா். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிா்வாகம், கிராம ஊராட்சிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT