கிருஷ்ணகிரி

கழிப்பறை வசதியுடன் 75 நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்: அமைச்சா் அர.சக்கரபாணி

12th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நியாயவிலைக் கடைகள் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்ததாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலானய்வுத் துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ராஜாராமன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் பிரபாகா், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிா்வாக இயக்குநா் சிவஞானம், கூடுதல் பதிவாளா் (கூட்டுறவுத் துறை) சங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), மதியழகன் (பா்கூா்), ராமச்சந்திரன் (தளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தலின் போது அறிவித்த தோ்தல் அறிக்கையின்படி விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14 மாதங்களில் 12,88,953 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 38,476 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 73 நியாயவிலைக் கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 10 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 63 நியாயவிலைக் கடைகளும் விரைவில் பிரிக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 நியாயவிலைக் கடைகளில் 50 கடைகள் மட்டுமே வாடகைக் கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றுக்கு புதிதாக சொந்தக் கட்டடம் கட்டப்படும். இந்த மாவட்டத்தில் தரைதளம், மேல்தளம் பழுதடைந்துள்ள சுமாா் 306 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. விரைவில் அந்தக் கட்டடடங்கள் சீரமைக்கப்படும்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாயவிலைக் கடைகள் கழிப்பறை வசதியுடன் கட்டப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 75 நியாயவிலைக்கடைகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். 2021- 22-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு ரூ. 8,382 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை மே 24-ஆம் தேதியே திறக்கப்பட்டதால் 2022-23-ஆம் ஆண்டு நெல் கொள்முதல் பருவம் 1.10.2022-க்கு பதிலாக 1.9.2022 முதல் கொள்முதல் செய்ய பிரதமருக்கு, தமிழக முதல்வா் கடிதம் எழுதியதால் ஒரு மாதத்திற்கு முன்னதாக நெல் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களைக் காட்டிலும் பிற பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

அரிசி கடத்தலைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் ரோந்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றன. கா்நாடக மாநில எல்லையோரத்தில் 2019 மற்றும் 2020- 21-ஆம் ஆண்டுகளில் 280 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஓராண்டில் மட்டும் 295 போ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT