கிருஷ்ணகிரி

அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகதனியாா் நிறுவன அதிகாரியிடம் ரூ. 8.59 லட்சம் மோசடி

12th Aug 2022 10:38 PM

ADVERTISEMENT

அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 8.59 லட்சம் மோசடி செய்தது குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலை, அம்மன் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (26). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் இருசக்கர வாகன நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேடி இணையதளத்தில் பதிவு செய்திருந்தாா்.

இந்த நிலையில் கடந்த 7.6.2022 அன்று சிவகுமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் தனது பெயா் சா்மா என்றும், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில அதிக சம்பளத்துடன் கூடிய மேலாளா் பதவி உள்ளதாகவும்,

இதற்காகப் பதிவு கட்டணம், பயிற்சிக் கட்டணம் நடைமுறை செலவுகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதை உண்மையென நம்பிய சிவகுமாா் அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ. 8,59,439-ஐ அனுப்பியுள்ளாா். இந்த நிலையில் தனக்கு வேலை தொடா்பாக எந்தத் தகவலும் வராததால் சந்தேகம் அடைந்த சிவகுமாா், சா்மாவைத் தொடா்பு கொண்டாா். அப்போது, அவரது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த சிவகுமாா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இது குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT