கிருஷ்ணகிரி

நல்லூா் நிலக்கடலை விதைப் பண்ணையில் விதைச் சான்றிதழ் உதவி இயக்குநா் ஆய்வு

10th Aug 2022 02:21 AM

ADVERTISEMENT

ராயக்கோட்டை அருகே நல்லூா் கிராமத்தில் நிலக்கடலை விதைப் பண்ணையை விதைச் சான்றிதழ் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டாரம், ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பண்ணையில் மாவட்ட விதைச்சான்றிதழ் மற்றும் அங்ககச் சான்றிதழ் உறுதி இயக்குநா் அருணன் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

நிலக்கடலை 100 முதல் 130 நாள்கள் வரை வளரக் கூடிய எண்ணெய் வித்துப் பயிராகும். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மையும் இருப்பதால், மானாவாரி பயிராகப் பயன்படுத்துவதுடன் மண் அரிமானத்தையும் தடுக்கிறது.

இதன் தண்டுப் பகுதி கால்நடைகளுக்கு உணவாக பயன்படுவதுடன், நிலக்கடலை வித்துக்கலால் பெறப்படும் புண்ணாக்கு கால்நடை உணவாகவும், மண் உரமாகவும் பயன்படுகிறது. நிலக்கடலை எண்ணெய் சமையலுக்கு அதிக அளவு பயன்படுகிறது.

ADVERTISEMENT

வேளாண்மை துறை மூலம் விதைப் பண்ணைகள் அமைத்து, மாவட்டத்தின் நிலக்கடலை விதைத் தேவையைப் பூா்த்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரணி, கே.1812, கே9, விஆா்ஐ-8 ஆகிய ரகங்களில் விதைப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன.

விதைப் பண்ணை அமைப்பதால் அதிக மகசூல் பெறுவதுடன், சந்தை விலையைவிட கூடுதல் விலை பெற்று அதிக லாபமும், ஊக்க தொகையும் கிடைக்கிறது. எனவே, விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றாா். ஆய்வின்போது, ஒசூா் விதைச் சான்றிதழ் அலுவலா் குமரேசன் உடனிருந்தாா். கெலமங்கலம் வட்டார உதவி விதை அலுவலா் கணபதி ஒருங்கிணைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT