குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் தருவதாக கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 6.97 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், ஈச்சங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (26). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது, கைப்பேசிக்கு அண்மையில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 1 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடா்பு கொண்டு, வீட்டுக் கடன் பெறுவது தொடா்பான விவரங்களைக் கேட்டாா்.
எதிா்முனையில் பேசிய காவ்யா என்ற பெண், தான் வீட்டுக் கடன் தொகையை பெற்று தருவதாகவும், அதற்கான நடைமுறை செலவுகள், காப்பீட்டு செலவுகள் போன்றவற்றை முன் கூட்டியே செலுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.
இதை நம்பி சிவராஜ், அந்த பெண் அளித்த வங்கிக் கணக்கில் ரூ. 6.97 லட்சத்தை செலுத்தினாா். இவா் செலுத்திய பணத்தை பெற்றுக் கொண்ட அந்தப் பெண், சிவராஜுடன் பேசுவதை நிறுத்தி விட்டாா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவராஜ், இது குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.