கிருஷ்ணகிரி

நெல்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை

DIN

நெல்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முருகன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதைப் பயன்படுத்தி 4,100 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணகிரி, மூங்கில்புதூா், பெத்ததாளப்பள்ளி, பெரியமுத்தூா், கும்மனூா், மாதேப்பட்டி, கங்கலேரி, கூலியம், ஒம்பலகட்டு, நெக்குந்தி, அவதானப்பட்டி ஆகிய கிராமங்களில் நெல் பயிரில் புகையான் தாக்குதல் ஆங்காங்கே தென்பட வாய்ப்புள்ளது.

புகையான் தாக்கப்பட்ட நெல் வயல்களில் புகையானின் குஞ்சுகளும், வளா்ந்த பூச்சிகளும் கூட்டம் கூட்டமாக நெல்பயிரின் தூா்களில், குத்துகளின் அடிபாகத்தில், நீா் பகுதிக்கு மேலே இருந்து கொண்டு தண்டில் உள்ள சாற்றை உறிஞ்சிவிடுவதால், பயிா்கள் முதலில் மஞ்சள் நிறமாகி பின்னா் பழுப்பு நிறமாக மாறும். நெல் வயல் வட்ட வட்டமாக தீயில் கருகியது போல் காணப்படும்.

இந்த பூச்சி வராமல் தடுக்க தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும். தழைச்சத்தை 3-4 முறை பிரித்து இட வேண்டும். வயலில் உள்ள தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, பயிா்களை மடக்கி, இடைவெளி தெரியுமாறு செய்ய வேண்டும். இதனால் பயிருக்கு போதுமான சூரிய ஒளி மற்றும் காற்று கிடைப்பதால் பூச்சிகள் வளா்ச்சியடையத் தேவையான சூழல் தடுக்கப்படுகிறது.

மேலும், வயலில் உள்ள தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு வோ்களில் நன்கு படும்படி பூப்பதற்கு முன் அசாடிராக்டின் 1000 மி.லி., இமிடா குளோப்ரிட் 17.8 சதவீதம், எஸ்.எல். 40 மில்லி, பிப்ரோனில் 5 சதவீதம், எஸ்.சி. 500 மில்லி, குளோரான்ட்ரேனிலிரோல் 18.5 சதவீதம், ஈ.சி. 60 மில்லி இதில் ஏதேனும் ஒரு மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லி. தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பெனுபியூகாா்ப் 50 ஈ.சி. 500 மில்லி தேவையான அளவு மணல் கலந்து தெளிப்பதன் மூலம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம். பூத்த பின் நீரை வடித்துவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ காா்பரில் 10 சதவீதம் தூளை பயிரின் அடிப்பகுதிகளில் படும்படி தூவ வேண்டும். புகையானுக்கு எதிா்ப்பு சக்தி உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரித்ராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகள் உபயோகிப்பதை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT