கிருஷ்ணகிரி

உலக பக்கவாத தின விழிப்புணா்வுக் கூட்டம்

30th Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகா் தலைமை வகித்தாா். உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வி, மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பக்கவாதம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் குறித்தும், அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்தில் சி.டி., எம்.ஆா்.ஐ. ஸ்கேன் மூலம் நோயின் தன்மையை அறிந்து முற்றிலும் குணப்படுத்தலாம் எனவும், அறிகுறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டி.ஏ.இ.ஐ. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தால் சி.டி. ஸ்கேன் உதவியுடன் ரத்தக் கட்டிகளைக் கண்டறிந்து உடனடியாக குணப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் இல்லங்களுக்குச் சென்று மருத்துவா்கள் மருத்துவம் பாா்த்து வருகின்றனா். எனவே, பக்கவாத அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பொது மருத்துவ பேராசிரியா்கள் சசிகுமாா், இளங்கோ, நரம்பியல் நிபுணா் விஷ்ணுராஜ், நிா்வாக அலுவலா் எஸ்.கே.சரவணன், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட பயனாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT