கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

21st Oct 2021 11:52 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் சாா்பில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். அமைச்சா் கீதா ஜீவன், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இயக்குநா் ரத்னா, அரசின் முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), முன்னாள் எம்எல்ஏ-க்கள் டி.செங்குட்டுவன், பி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ADVERTISEMENT

தேனி, தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துமாறு முதல்வா் கூறியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2015 இல் 246 குழந்தைத் திருமணங்கள் (0.9 சதவீதம்) நடந்துள்ளன. 2016-இல் 352 திருமணங்கள், 2017-இல் 572 திருமணங்கள், 2018-இல் 676 திருமணங்கள், 2019- இல் 650 திருமணங்கள், 2020-இல் 830 திருமணங்கள் (2.8 சதவீதம்) நடந்துள்ளன. கடந்த கடந்த 10 மாதத்தில் மட்டும் 728 திருமணங்கள் ( 3.1 சதவீதம்) நடந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது குறித்து முந்தைய ஆட்சியாளா்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இளம்வயது திருமணத்தைத் தடுக்க தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க பொதுமக்கள், ஊராட்சித் தலைவா்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ஐஸ்கிரீம் பாா்லா் ஒன்றில் ஐஸ்கிரீமுடன் மதுவைக் கலந்து விற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சீரழிவுகளை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றாா்.

அமைச்சா் கீதா ஜீவன் பேசியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 1098, 1091, 181 ஆகிய எண்களில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக புகாா் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

18 வயதைக் கடந்த பிறகுதான் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கரோனாவால் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சமும் வைப்புத்தொகையாகச் செலுத்தப்படுகிறது என்றாா்.

நடைப்பயிற்சியின் போது குறைகேட்பு

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை இரவே கிருஷ்ணகிரி வந்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், வியாழக்கிழமை அதிகாலை பையனப்பள்ளி, பாஞ்சாலியூா், மேல்சோமாா்பேட்டை வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, சாலையில் வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

 

Tags : கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT