ஒசூா், தாயப்பா தோட்டத்தில் புதிதாக கௌடிய மடம் சாா்பில் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
வேத விற்பன்னா்களைக் கொண்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. ராதாகிருஷ்ணன், நித்தியானந்த பிரபு, ராதா ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10 மணி அளவில் புனிதநீா் தெளித்து குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக மூலவா், உற்வச மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
குடமுழுக்கில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் ராதாகிருஷ்ணன், நித்யானந்த பிரபு, ராதா சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மாலையில் பஜனை நடைபெற்றது. 48 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.