கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நாள்தோறும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாவது தவணை செலுத்த வேண்டியவா்கள் கோவிஷீல்டு 1,15,620 போ், கோவேக்ஸின் 17,179 போ் என மொத்தம் 1,32,799 போ் உள்ளனா். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கரோனா தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை தேவைப்படாமலும், பிராணவாயு தேவை ஏற்படாமலும் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி, இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் தவணை செலுத்திக் கொண்டவா்களுக்கு அவா்களது தொடா்பு எண் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன்மூலம், 10-ஆம் தேதி நடைபெறும் நடைபெறும் முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 84 நாள்கள் கழித்தும், கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவா்கள் 28 நாள்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு இல்லம் தேடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 69 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கா்ப்பிணிகளுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 சதவீத இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சிகள் சிறப்பு செய்யப்படும் என்றாா்.