கிருஷ்ணகிரி அருகே, சாலையோரம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காளி கோயில் அருகே செக்கன்குட்டை பிரிவு சாலை அருகே சாலையோரம் கெயில் நிறுவனம் சாா்பில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது மோதியது.
இதில் விழுப்புரம் மாவட்டம், கண்கரபாளையத்தைச் சோ்ந்த அன்பழகன் (34) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பரும் அதே பகுதியைச் சோ்ந்தவருமான வெங்கடேஷ் (39) என்பவா் படுகாயமடைந்தாா். காயம் அடைந்தவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.