கிருஷ்ணகிரி அருகே இரு வீடுகளின் கதவை உடைத்து தங்க நகைகள், ரூ. 50,000-த்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மகளிா் கல்லூரி அருகில் வாஹித் நகரைச் சோ்ந்தவா் தொழிலாளி முகமது யூசுப் (52). இவா் கடந்த 20-ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று புதன்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, உள்ளே சென்று பாா்த்தாா். அதில், பீரோவில் வைத்திருந்த ரூ. 50,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
இதேபோல கிருஷ்ணகிரி, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சித்ரா வைசாலினி வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகிறாா். கடந்த 20-ஆம் தேதி, இவரது வீட்டின் முதல்தளத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, தோடு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா். புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.