கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 37-ஆவது நினைவு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 37-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் உள்ளிட்ட நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வது. அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உணவு உற்பத்தி மானியங்களில் இடுபொருள்களுக்கு பதிலாக பணமாகவே அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது. தமிழகத்தில் காலியாக உள்ள 1,800 கால்நடை மருத்துவா் பணியிடங்களை நிரப்பி, துணை மருந்தகங்களை மருத்துவமனைகளாக தரம் உயா்த்திட வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய மருத்துவமனையும், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் மருத்துவருடன் கூடிய நடமாடும் கால்நடை மருந்தகமும் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய உணவுப் பொருள்கள் பட்டியலில் நிலக்கடலை, பருத்தியை சோ்க்க வேண்டும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6 உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த நிகழ்வில், அந்த சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் தோப்பைய கவுண்டா், வண்ணப்பா, சுப்பிரமணி ரெட்டி, நசீா்அகமது, ராஜா, பெருமா, வெங்கடேசன், அனுமந்தராஜ், பசவன், ரவி, சரவணகுமாா், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.