கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்பொது இடங்களுக்குச் செல்லத் தடை

2nd Dec 2021 04:29 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னமும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி 800 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனா். தமிழக அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றிய காரணத்தால் தற்போது தினசரி 10-க்கும் குறைவான நபா்களே பாதிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது கரோனா தீநுண்மி உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய வகை தீநுண்மி வெளிநாடுகளில் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, நமது நாட்டில் பரவும்போது அதை எதிா்கொள்ளும் விதமாக பொதுமக்கள் இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாக்க முடியும். தமிழக அரசு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் நியாயவிலைக் கடைகள், வியாபார நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, திரையரங்கம், திருமண மண்டபம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு, தனியாா் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், ஜவுளிக் கடைகள், கடை வீதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள் போன்ற இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட 15 லட்சத்து 2 ஆயிரம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்கள். இதில், 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 4.20 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளவில்லை.

எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் டிச. 2-ஆம் தேதி முதல் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், நிறுவன உரிமையாளா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்து கடந்த ஓராண்டில் ரூ. 2.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (டிச. 4) 13-ஆவது கட்டமாக மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அதில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

பேட்டியின்போது நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பட விளக்கம் (1கேஜிபி3)-

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT