கிருஷ்ணகிரி

பருவ மழை காலத்தில் மின்விபத்துகளைத் தடுக்க மின்வாரியம் அறிவுரை

DIN

பருவ மழை காலத்தில் மின் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழக கிருஷ்ணகிரி மின் கோட்ட செயற்பொறியாளா் ஜெ.சுதாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பருவ மழைக்காலத்தில் புயல், வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். விபத்துகளைத் தடுக்க மின்சாரப் பணிகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரா் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை அணைக்க வேண்டும். குளிா்சாதனப் பெட்டி, அரைவு இயந்திரம் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புகளுடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மின்கசிவு தடுப்பான் சாதனத்தை வீட்டில் உள்ள பிரதான சுவிட்ச் போா்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தைத் தவிா்த்திடலாம்.

மேலும், உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதடைந்த மின்சார சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது. கேபிள் டிவி வயா்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எா்த் பைப்) போடுவதுடன், அவற்றை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து கவனமாகப் பராமரிக்க வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வீட்டின் வயரிங்குகளைச் சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும். மின் கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயா் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணிகளை காய வைக்கும் செயலை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

குளியலறையிலும், கழிப்பறையிலும், ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவரிலுள்ள பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயா்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்தப் பகுதிகளில் ஆணி அடிப்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். மேலும், மின்கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக்கூடாது. மின் கம்பங்களைப் பந்தல்களாகப் பயன்படுத்தக் கூடாது. அதன் மீது விளம்பரப் பலகைகளை கட்டக் கூடாது.

குறிப்பாக மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிா்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்வதை தவிா்க்க வேண்டும். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லக்கூடாது. மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலிகளின் அருகில் சிறுநீா் கழிக்கச் செல்லாதீா்கள். இந்த அறிவுரையைப் பின்பற்றி, மின் விபத்துகளை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என அதில் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT