கிருஷ்ணகிரி

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல்: வேளாண் துறை அறிவுரை

31st May 2020 08:45 AM

ADVERTISEMENT

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஊத்தங்கரை வேளாண் அலுவலா் பிரபாவதி வெளியிட்ட அறிக்கை: கோடை உழவு மேற்கொள்ளுதல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு சூரியஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். இதன்மூலம் அந்துப்பூச்சி உற்பத்தியைக் குறைக்க முடியும். ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணிலிடுவதன் மூலம் அந்துப்பூச்சி வெளிவருவதைத் தடுக்க இயலும். மேலும், விதை நோ்த்தி செய்தல் அவசியம் ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் நுண்ணுயிா் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா அல்லது 10கிராம் தயோமீதாக்சம் 30 சதவீதம் எப்.எஸ் அல்லது 6 மி.லி சயான்டிரினிபுரோல் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் புழுக்கள் அதன் இளம் பருவத்திலேயே கட்டுப்படுத்தப்படும்.

மானாவாரி மக்காச்சோளத்துக்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீ. மற்றும் பயிருக்கு பயிா் 20 செ.மீ. இடைவெளியும் கொண்டு பயிரிட வேண்டும். மேலும், 10 பயிா் வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ இடைவெளிவிட வேண்டும். இதனால் பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளலாம். சூரிய விளக்குப்பொறி மற்றும் இனக்கவா்ச்சிப் பொறிகள் வைத்தால் அமெரிக்கன் படைப்புழுத் தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க விதைத்தவுடன் சூரிய விளக்குப்பொறி ஹெக்டேருக்கு 1 எண் மற்றும் இனக்கவா்ச்சிப் பொறிகள் ஹெக்டேருக்கு 12 எண்கள் வைத்து கண்காணிக்கலாம்.

தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிா்களை வரப்பு பயிராகவும் , உளுந்து மற்றும் பாசிப்பயரை ஊடுப் பயிராக பயிரிட வேண்டும்.மக்காச்சோள இளம் பயிா்களில் காணப்படும் அந்துப் பூச்சிகளின் முட்டைக் குவியல்கள் மற்றும் இளம்புழுக்கூட்டங்களைக் கைகளால் சேகரித்து அழிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT