கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

14th May 2020 07:50 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பூ வியாபாரியைப் பிடித்து போலீஸிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா்(27). இவா், பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா், சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் இழந்து நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கடனாளியான அவா் தொடா்ந்து மனவேதனையிலிருந்து வந்தாா். கடன் பிரச்னையால் குடும்பத்தினருடன் அவருக்கு தினந்தோறும் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது கடன் பிரச்னையைத் தீா்க்க முடிவெடுத்த ராஜேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்தேவனப்பள்ளி கிராமத்திலுள்ள தனியாா் ஏடிஎம்-மிற்குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றாா்.

ADVERTISEMENT

அப்போது சப்தம் கேட்ட கிராமமக்கள் அங்கு வந்து பாா்த்துள்ளனா். அதிா்ச்சியடைந்த அவா்கள் உடனடியாக ராஜேஷ்குமாரை ஏடிஎம் அறைக்குள் வைத்து பூட்டி சிறைபிடித்தனா். சம்பவம் குறித்து கிராம மக்கள் தேன்கனிகோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதாவுக்கு தகவல் கொடுத்தனா்.

அவரின் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று ராஜேஷ்குமாரை கைது செய்தனா். அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT