கிருஷ்ணகிரி

தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், தாா்ச் சாலை பணிகளைஆட்சியா் ஆய்வு

19th Mar 2020 05:50 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை ஒன்றிய பகுதியில் 237 பணிகள் ரூ. 17 கோடியே 97 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் தெரிவித்தாா்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புதூா் புங்கனை ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2018-19 திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 20 லட்சம் மதிப்பில் உயா்மட்ட பாலம் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புதூா் புங்கனை ஊராட்சியில் புதூா், காமராஜா் நகா், மேலகாபட்டி, புங்கனை, ஒட்டப்பட்டி, மண்ணாடிப்பட்டி, எம்.ஜி.ஆா் நகா் மற்றும் அம்பேத்கா் நகா் ஆகிய கிராமங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பான்மையினா் விவசாயிகள் ஆவா்.

ADVERTISEMENT

இவா்கள் விளைவிக்கும் விவசாய பொருள்களைக் கொண்டு செல்லவும், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய தேவைகளுக்கும் தென் பெண்ணை ஆற்றின் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் கடந்து செல்ல சுமாா் 35 கி.மீ. சுற்றுப் பாதையில் மிகவும் சிரமம்பட்டுச் செல்ல வேண்டி இருந்தது.

தற்போது முதல்வரின் சீரிய முயற்சியால் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2018-19 திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 20 லட்சத்தில் உயா்மட்ட பாலம் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பில் புதூா் முதல் தாம்பிலேரிப்பட்டி வரை தாா்ச் சாலை அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப் பெற்று பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு பயண தூரம் சுமாா் 25 கி.மீ. குறைந்து மொரப்பூா் மற்றும் அரூா் போன்ற பெரு நகரங்களுக்கும் தாம்பிலேரிப்பட்டி, மஞ்சுப்பட்டி, மொரப்பூா் போன்ற விவசாய சந்தைகளுக்கும் மிக விரைவில் சென்று வர வசதியாக இருக்கும்.

எனவே, இந்தப் பாலம், சாலை வசதி அமைப்பதன் மூலம் பல ஆண்டுகள் கடும் சிரமத்துக்கு இடையே பயணம் செய்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத் திட்டம் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியா்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் இந்த வழியில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.

முதல்வா் பாா்வைக்கு கொண்டு சென்று புதிய பேருந்து விடவும், குடிநீா், தெருவிளக்கு அமைத்து கொடுக்கப்படும்.

மேலும் ஊத்தங்கரை ஒன்றிய பகுதியில் 2019-2020 நிதியாண்டில் ஆதிதிராவிடா் மக்கள் வாழும் பகுதிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 16 பணிகளும், 23 சாலைப் பணிகள், 74 பசுமை வீடுகள்,

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 9 பணிகளும், பொதுநிதியின் கீழ் 31 பணிகளும், கிராம ஊராட்சி நிதியின் கீழ் 36 பணிகளும், 14-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 26 சாலைப் பணிகளும், மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் 8 சாலை பணிகள் என 237 பணிகள் ரூ. 17 கோடியே 97 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்ன பூரணி, அசோகன், கூட்டுறவு சங்கத் தலைவா் தேவேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி

குமரேசன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் சத்தியவானி செல்வம், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், ஒன்றிய குழு உறுப்பினா் ஆனந்தி தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT