கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

16th Mar 2020 01:19 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போா்க்கால அடிப்படையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள அந்திவாடி, ஜூஜூவாடி, கக்கனூா், மதக்கொண்டபள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, கும்ளாபுரம், அா்த்தக்கல் பாடா், சம்பங்கிரி எல்லை, பேரிகை, நேரலகிரி, அத்திகுண்டா, குருவிநாயனப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் உடனடியாக நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகளை வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.மேலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தா்கள் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுத்து, போதிய அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இந்த மாத இறுதி வரையில் வணிக வளாகங்களை மூட அறிவுறுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 22 திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டங்களை நடத்தி, போா்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் பெரியசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன் உள்ளிட்ட அரசு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் பேருந்துகளில் நோய்த் தடுப்பு பணிகளில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். மேலும், கரோனா தாக்குதல், தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT