கிருஷ்ணகிரி: மேகாலயா மாநிலத்தில் உள்ள மலைக்கிராம மாணவா்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான உதவிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தினா் அண்மையில் வழங்கினா்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் பல்வேறு கல்விச் சேவைகளை வழங்கி வருகிறது. அந்த மாநிலங்களில் அடிப்படை வசதியின்றி வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில், இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள மக்கன்ரூ மலைக் கிராமத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆயிரம் சோலாா் விளக்குகளும், ரூ.5 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகம், தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், குளிா்கால ஆடைகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.
இந்த மக்களின் நலனுக்காகவும், கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்படும் ஹோலிகிராஸ் பள்ளியின் வாயிலாக இதுவரை ரூ.45 லட்சம் மதிப்பிலான சேவைகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.