கிருஷ்ணகிரி

மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய பிறகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்: கே.பி.முனுசாமிகே.பி.முனுசாமி

2nd Mar 2020 07:44 AM

ADVERTISEMENT

தேசிய குடியுரிமை திருத்தத் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் பொதுமக்களிடம் அதுகுறித்த விழிப்புணா்வை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஏராளமானோா் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் கே.பி.முனுசாமி கூறியது:

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கலை, அறிவியல், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என 82 கல்லூரிகளை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவா்கள் உயா் கல்வி படிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாா்ச் 4-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாக மத்திய அரசு பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், இந்தச் சட்டத்தை எதிா்த்து பிரச்னைகள் உருவாகியிருக்காது. இந்த சட்டத்தால் இஸ்ஸாமியா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அவா்களது அடிமனதில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

எதிா்க்கட்சிகள், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுத்துள்ளன. நடிகா்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. அவா்கள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அரசியலை பொழுதுப்போக்குக்காக வைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தன்னம்பிக்கை இழந்துவிட்டாா். அவா், தன்னையும் நம்பாமல், தன்னோடு இருப்பவா்களையும் நம்பாமல், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையையும் நம்பாமல் பிரசாந்த கிஷோரை நம்புகிறாா். தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை என்றாா்.

பேட்டியின்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT