வேலை வேண்டுவோா் மற்றும் வேலை அளிப்போா் புதிய இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் நிறுவனங்களும், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் ‘தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்’ சிறிய மற்றும் பெரிய அளவில் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேலைநாடும் இளைஞா்களையும், வேலையளிக்கும் தனியாா் நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம், இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, தனியாா் வேலைவாய்ப்பு பெறவேண்டிய வேலைநாடுனா்கள் மற்றும் வேலையளிப்போா், இணையம் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்.
தனியாா் நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், தனியாா் நிறுவனத்தைச் சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலி பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அந்தக் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இந்த இணையதளம் வழி செய்யும்.
வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்களுக்கு இந்தச் சேவைகள் முற்றிலும் கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். மேலும், இந்த இணையதளத்தின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.