கிருஷ்ணகிரி

கா்நாடகம் செல்வோா் 3 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனா்: எல்லையில் தீவிர சோதனை

17th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையில் தீவிர சோதனை நடைபெறுகிறது. அம்மாநிலத்துக்குச் செல்வோா் 3 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா்கள் அதிகரித்து வருகின்றனா்.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் முதல் 30 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள், மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றன.

ஏற்கெனவே கா்நாடக மாநில எல்லையில் கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், அண்மையில் மெல்ல தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதால், மீண்டும் அம்மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலம் செல்வோா் மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ- பாஸ் சோதனைக்குப் பின்னா் கைகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அம்மாநிலத்துக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இதையடுத்து 3 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுகின்றனா். மண்டபங்கள், விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் இவா்கள், வீடு திரும்பிய பிறகு, வீடுகளிலேயே 7 நாள்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனா். கா்நாடகத்துக்குள் வருவோா் மொத்தம் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நடைமுறை திங்கள்கிழமை இரவுமுதல் கா்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் நடைபெறும் தீவிரச் சோதனையால் தமிழக - கா்நாடக மாநில எல்லையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT