கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி பலி: கிராம மக்கள் சாலை மறியல்

11th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கியதில் உழவா்சந்தைக்கு காய்கறிக் கொண்டுசென்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மேலகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (45). இவா், புதன்கிழமை அதிகாலை நிலத்தில் பயிா் செய்திருந்த காய்கறிகளை தேன்கனிகோட்டை உழவா் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த ஒற்றை யானை விவசாயி சீனிவாசனை (45) துரத்தியது. யானை வருவதைக் கண்ட சீனிவாசன் காய்கறிகளை வீசிவிட்டு ஓடினாா். ஆனால் வேகமாகத் துரத்திய யானை விவசாயி சீனிவாசனை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது.

இதைக் கண்ட கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலா் பிரபு, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் ராமசந்திரன், டிஎஸ்பி சங்கீதா, காவல் ஆய்வாளா் சரவணன், வனசரகா் சுகுமாா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

கிராம மக்கள் விவசாயியின் சடலத்தை எடுக்க விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஓய். பிரகாஷ் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தினாா்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை யானை மயக்க ஊசி மூலம் பிடித்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா். நான்கு மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு காவல் துறையினா் சீனிவாசனின் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த சீனிவாசன் ஈமச் சடங்குக்காக அவருடைய குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் காசோலையை மாவட்ட வன அலுவலா் பிரபு வழங்கி ஆறுதல் கூறினாா்.

இரு வாரங்களில் மூவா் பலி:

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆண் ஒற்றை யானை கடந்த சில மாதங்களாக சுற்றி வருகிறது. கடந்த சில நாள்களாக ஒற்றை யானை விவசாயிகளைத் துரத்தி கொன்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 3 பேரைக் கொன்ற ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடந்த மே 26-ஆம் தேதி ஒற்றை யானை துரத்தியதில் பால தொட்டனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திம்மராயப்பா என்பவா் இறந்தாா். இம் மாதம் 3-ஆம் தேதி பூதக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சின்னப்பா தனது ஆடுகளைத் தேடிச் சென்றபோது அதே ஒற்றை யானை தாக்கி இறந்தாா். புதன்கிழமை சீனிவாசன் யானையால் கொல்லப்பட்டுள்ளாா்.

இந்த ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT