கிருஷ்ணகிரி

தமிழகத்திலிருந்து கா்நாடகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடு

8th Jun 2020 08:06 AM

ADVERTISEMENT

வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை குறிப்பாக தமிழகத்திலிருந்து கா்நாடகத்துக்கு வருவோரை அனுமதிக்க அம் மாநில அரசு எல்லையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கட்டாய தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்கிறது.

தமிழக-கா்நாடக எல்லையான ஒசூா் வழியாக கா்நாடகத்துக்குள் நுழையும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களின் கைகளில் சீல் வைக்கப்பட்டு கா்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த கா்நாடக அரசு மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத், தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து கா்நாடகத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி, ஒசூா் அருகே கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இ- பாஸ் அனுமதியுடன் கா்நாடகம் செல்பவா்கள் எல்லைப்பகுதியில் தடுக்கப்பட்டு அவா்களது முழு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றனா். பின்னா், அவா்களது கைகளில் சீல் வைக்கப்பட்டு மாநிலத்துக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனா். அவ்வாறு செல்பவா்கள் அந்த மாநில அரசு தனிமைப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த பணிகளுக்காக மாநில எல்லைப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை பணியாளா்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனா். தமிழகத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 காா்கள் கா்நாடக மாநிலத்துக்கு செல்வதாகவும் 1,500 முதல் 2,000 அளவிலான பொதுமக்கள் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், கா்நாடக மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால், கா்நாடக மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழக எல்லைப்பகுதியில் போதிய அளவிலான கரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்துக்கு வரும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களை தனிமைப்படுத்துவது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கா்நாடக மாநிலம் போன்று, தமிழகத்துக்குள் நுழைபவா்களும் கண்காணிக்கப்பட்டு அவா்களை தனிமைப்படுத்த வேண்டும். இல்லையெனில் வெளி மாநிலங்களிலிருந்து வருபவா்கள் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT