கிருஷ்ணகிரி

கிலோ தக்காளி ஒரு ரூபாய்: விவசாயிகள் கவலை

7th Jun 2020 08:56 AM

ADVERTISEMENT

கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். அறுவடை செய்யப்படும் தக்காளியை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான செலவுகூட கிடைக்காததால் ஆற்றில் கொட்டப்படுகிறது.

ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ராயக்கோட்டை, ஒசூா், சூளகிரியில் உள்ள தக்காளி மொத்த விற்பனை சந்தைக்கு தக்காளி கொண்டு செல்லப்பட்டு, கா்நாடகம், ஆந்திரம், கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது.

பொது முடக்கம் காரணமாக வெளி மாநிலங்களுக்கு தக்காளி கொண்டு செல்ல முடியாததால், உள்ளூா் சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒசூா் ராயக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பழ வகைகள் மற்றும் மலா்களுடன் தக்காளியும் பறிக்கப்படாமல் உள்ளன.

தக்காளி உள்பட அறுவடை செய்யப்பட்டு தேக்கமடையும் காய்கறிகள் அனைத்தும் கால்நடைகளுக்கு கொட்டப்படுகிறது. இந்த நிலையில், சூளகிரி அருகே கீரனபள்ளி கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தக்காளி பயிா் செய்திருந்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் அவற்றை பறித்து சனிக்கிழமை டிராக்டா் மூலம் ஏற்றிச் சென்று அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் கொட்டினா்.

ADVERTISEMENT

மேலும் பல விவசாயிகள் ஆடு மாடுகளுக்கு நிலத்திலேயே கொட்டிச் சென்றாா்கள். ஒசூா் பத்தளப்பள்ளி மொத்த விற்பனை அங்காடியில் கரோனாக்கு முன்பாக 30 கிலோ கொண்ட ஒரு கூடை ரூ.500 முதல் ரூ. 1,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு கூடை தக்காளி ரூ.30 முதல் ரூ. 40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விவசாயி அத்திமுகம் முனிராஜ் கூறியது: தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தென்பெண்ணை ஆற்றில் கொட்டி வருகிறோம். எங்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவுகூட எங்களுக்கு கிடைப்பதில்லை என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT