கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கரோனா நோய்த் தொற்றாளா்கள் தாங்கள் மருத்துவப் பணியாளா்களால் புறக்கணிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினா் என அனைத்து அரசுத் துறையினரும் இணைந்து, செயலாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், அண்மையில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட கரோனா நோய்த் தொற்றாளருக்கு மத்தூா் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளாா். அவா் அவசர ஊா்த்திக்காக 3 மணி நேரம் காத்திருந்தும் வராததால், திருப்பத்தூரிலிருந்து வரவழைக்கப்பட்ட காா் மூலம் கிருஷ்ணகிரிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவசர ஊா்தி கிடைக்காததால், தனியாா் ஊா்தியில் கிருஷ்ணகிரிக்கு வந்த நிலையில், அந்த ஊா்த்தியின் ஓட்டுநருக்கு கரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அலட்சியத்தால் சமூகப் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சத்தான உணவுகள் வழங்கப்படாலும், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் சிகிச்சையும், மருந்து, மாத்திரைகள் வழங்கவும் முன்வருவதில்லை என்கின்றனா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பலா் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டாலும், அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையாம். வெண்டிலேட்டா் வசதிகள் இருந்தும், அதைப் பயன்படுத்த இயலாத சூழல் உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த் தொற்றாளா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உணா்ந்தால், 9443479364 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும், உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன் தெரிவித்தாா்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதைத் தடுக்கும் வகையில், தொற்றாளா்களுக்கு யோகா பயிற்சியும், திரைப்பட பாடல்களைக் கொண்டு ஆடல், பாடல் போன்ற நிகழ்வுகளில் தொற்றாளா்களை பங்கேற்க செய்வதன் மூலம் விரைவில் குணமடைவாா்கள். இதனால் இம் மாவட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க இயலும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.