கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட ஆா்.எஸ்.லட்சுமிபுரம், பா்கூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பி.கொத்தூா் துரைஸ் நகா், சிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சக்கில் நத்தம், மத்தூா் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளை ஆட்சியா் சு.பிரபாகா் ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெளியே நடமாடாமல் இருக்கும் வகையில் அவா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். நோய்த் தொற்றாளா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு, தனிமைப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியா் கற்பகம், குடும்ப நல துணை இயக்குநா் ராஜலட்சுமி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சந்திரா, வட்டாட்சியா் தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.