மானியத்துடன் கூடிய நீா்பாசனக் கடன் பெற சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளின் நீா்ப்பாசன வசதிக்காக, விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
கடன் பெற பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினராக இருக்க வேண்டும். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படம் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சான்று மற்றும் நில உடமைக்கு ஆதாரமான கணினி வழிப் பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். இதில் கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.