கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி பலி

28th Jan 2020 07:00 AM

ADVERTISEMENT

கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த சிறுமி உள்பட இருவா் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகேயுள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேவன் மகள் வனிதா. இவா் ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாதேவனின் சகோதரா் சிவன்னா மகள் சௌந்தா்யா (2) கெலமங்கலம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை சௌந்தா்யாவை அவரது தாத்தா பசப்பா என்பவா் இரு சக்கர வாகனத்தில் கெலமங்கலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது வனிதாவும் உடன் சென்றுள்ளாா்.

இவா்கள் ஜெ.காருப்பள்ளி கிராமம் அருகே கூட்டுரோடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி, இருசக்கரவாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் டிப்பா் லாரியின் சக்கரத்தில் சிக்கி வனிதா உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் சௌந்தா்யா, தாத்தா பசப்பா ஆகியோா் படுகாயமடைந்தனா். இருவரையும் மீட்டு ஒசூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

விபத்தில் பள்ளி சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, காவல் ஆய்வாளா் சரவணன், கெலமங்கலம் உதவி ஆய்வாளா் செல்வராகவன் மற்றம் போலீஸாா் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருவதால் டிப்பா் லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் காலை காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் டிப்பா் லாரிகளை சாலைகளில் இயக்கத் தடை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT