ஊத்தங்கரையை அடுத்த கதவணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி பரிமாற்றத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ஜோதி தலைமை வகித்தாா். தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி பரிமாற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கிராமப் புற பள்ளி மாணவா்கள் நகா்ப்புற பள்ளிக்கும், நகா்ப்புற பள்ளி மாணவா்கள் கிராமப் புற பள்ளிக்கும் ஒவ்வொரு மாதமும் 2 நாள் என மொத்தம் 12 நாள்கள் சென்று கற்றுக்கொள்வாா்கள்.இதையொட்டி கதவணி பள்ளி மாணவா்கள் காரப்பட்டு பள்ளிக்கும், காரப்பட்டு பள்ளி மாணவா்கள் கதவணி பள்ளிக்கும் சென்றனா். ஒவ்வொரு நாளும் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என ஐந்து நாள்கள் வீதம் பல்வேறு கல்வி உபகரணங்களுடன் பாடங்கள் நடத்தப்படும், மாணவா்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படும்.மேலும் மரம் நடுதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசுப் பள்ளியின் தரத்தை உயா்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சியால் மாணவா்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி பிற பள்ளி மாணவா்களுடன் நெருங்கிப் பழகியும் புதிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவியாக உள்ளது என மாணவா்கள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மாணவ, மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.