தருமபுரி மாவட்டம், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.2.1 லட்சம் மதிப்பில் எல்இடி டிவிகள் நன்கொடையாக அண்மையில் வழங்கப்பட்டன.
தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். அங்கு பணியாற்றும் தலைமையாசிரியா், ஆசிரியா்களின் ஒருங்கிணைப்பால், அந்தப் பள்ளி முன்மாதிரியாக பள்ளியாகச் செயல்படுகிறது. மேலும், இந்தப் பள்ளி மாணவ, மாணவியா் அரசு பொதுத் தோ்வில் 96 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இந்தப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி ஸ்மாா்ட் போா்டு, வகுப்பறை, மேசை நாற்காலிகள் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, வகுப்பறையில் பாடம் நடத்தும் வகையில் எல்இடி டிவி வேண்டும் என பள்ளி சாா்பில் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரூ.2.1 லட்சம் மதிப்பிலான 6 எல்இடி டிவிகள், தாங்கிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அண்மையில் வழங்கினாா். அப்போது, பள்ளித் தலைமையாசிரியா் முனிமாதன், ஆசிரியா்கள், மாணவா்கள் உடனிருந்தாா். இதுவரை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.3.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.