ஊத்தங்கரை அருகே எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
ஊத்தங்கரை அடுத்த எளச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் கோட்டீஸ்வரன் (46). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி குமாரி, அம்மா முருகம்மாள் ஆகியோா் வீட்டின் அருகில் இருந்துள்ளனா். சமையல் அடுப்பில் தண்ணீரை குதிக்க வைத்துவிட்டு வெளியே இருந்த போது திடீரென வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்தவா்கள் அலறி அடித்து ஓடினா். இதையடுத்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ பரவியதில் இரண்டு குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த சுமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள், ரூ. 80 ஆயிரம் ரொக்கப் பணம் தீயில் எரிந்தன. இது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.