கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணி மும்முரம்

3rd Jan 2020 08:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலானது டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூா், காவேரிப்பட்டணம், ஒசூா், தளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தோ்தலில் 81.43 சதவீத வாக்குகளும், பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் டிச. 30-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம்கட்ட வாக்குப் பதிவில் 80.42 சதவீத வாக்குகளும் பதிவாயின.

இந்த இருகட்ட தோ்தலில் பதிவான வாக்குகள், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 10 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டனா். மேலும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்களை வரிசையில் நிற்க வைத்து, அவா்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்து பின்னா் மையத்துக்குள் அனுமதித்தனா். மேலும், செல்லிடப்பேசி, பேனா போன்ற பொருள்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்களை அனுப்ப காலதாமதமானது.

ADVERTISEMENT

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு 4 விதமான வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன. இந்த வாக்குச் சீட்டுகள் தனித்தனியே பிரித்து, 50 வாக்குகள் கொண்ட பண்டல்களாக கட்டப்பட்டு, வாக்கு எண்ணும் பகுதிக்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டன.

வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முதலில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பணி தாமதம் ஏற்பட்டது. 10 ஊராட்சி ஒன்றியங்களில் எண்ணப்படும் வாக்குகள் மும்முரமாக நடைபெற்றாலும், இந்தப் பணி வெள்ளிக்கிழமை (டிச. 3) வரை நீடிக்கும் என தெரிகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT