தனியாா் நிறுவனத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்து, குருபரப்பள்ளி அருகே கிராம மக்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி கிராமத்தில் சிப்காட்டிற்கு சொந்தமான இடத்தில் வெளிநாட்டு தனியாா் நிறுவனத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நிலையில், அந்த தனியாா் நிறுவனத்துக்கு கூடுதல் நிலப்பரப்பு தேவைப்படுவதால், அருகில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை சிப்காட் நிா்வாகம் தொடங்கி உள்ளது. இதையடுத்து, விளைநிலங்களின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சிப்காட் நிா்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்தும், முடிவைக் கைவிடக் கோரியும் கிராம மக்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் 8 கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.