ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில், பெற்றோரை இழந்த 125 கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவித் தொகை அண்மையில் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் மகளிா் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை தொடா்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில், ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதன் மூலம் தங்களது சேவைப் பணியை செய்து வருகிறது. பெற்றோரை இழந்த கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த மாணவருக்கு ரூ.10 ஆயிரம், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவருக்கு ரூ.6 ஆயிரம் என வழங்கப்படுகிறது.
அதன்படி, வேலூரில் உள்ள அக்சீலியம் கல்லூரியில் பயிலும் 125 மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.8 லட்சம் அண்மையில் வழங்கப்பட்டது. அந்தக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ரெஜினா மேரி தலைமை வகித்தாா். ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினாா். இதுவரை இந்தக் கல்லூரியின் மாணவியருக்கு ரூ.80 லட்சம் கல்வி உதவித் தொகை, கைபை, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.