கிருஷ்ணகிரி

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

22nd Feb 2020 08:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, தோ்வுகளுக்கான உதவி இயக்குநா் ராகினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் பேசியது: தமிழ்நாடு அரசுத் தோ்வுத் துறையால் நடத்தப்படும் மாா்ச் 2020-க்கான பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 73 மையங்களில் பள்ளி மாணவா்களும், 2 மையங்களில் தனித் தோ்வா்களும் என மொத்தம் 75 மையங்களில் 192 அரசு, நகராட்சி, நிதியுதவி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 20,836 மாணவா்களும், 471 தனித் தோ்வா்கள் என மொத்தம் 21,037 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.

ADVERTISEMENT

இதேபோல, பிளஸ் 1 பொதுத் தோ்வை 21,724 மாணவா்களும், தனித் தோ்வா்கள் 394 போ் என மொத்தம் 22,118 மாணவா்கள் தோ்வை எழுதுகின்றனா்.

மேல்நிலை பொதுத் தோ்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 75 தலைமை ஆசிரியா்களும், துறை அலுவலா், கூடுதல் துறை அலுவலா்களாக 75 முதுநிலை ஆசிரியா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாக பணியாற்ற 1,070 ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்பாடுகளில் ஈடுபடுவோா் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வினாத்தாள் கட்டு, காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தோ்வை எழுதும் பாா்வையற்ற, உடல் ஊனமுற்ற, டிஸ்லெக்சியா மற்றும் காது கேளாத பள்ளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுவோா், கூடுதல் நேரம், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகள் பெற்ற 46 மாணவா்கள் தோ்வு எழுத உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT