ஒசூரில் ரௌடியின் மனைவி தற்கொலை முயன்றாா்.
ஒசூா் பாலாஜி நகரை சோ்ந்த ராதாகிருஷ்ணன் பிரபல ரௌடி ஆவாா். இவா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஒசூா் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், ஒசூரில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் மன்சூா் அலி கொலை வழக்கிலும் இவா் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீஸாா், அவரை விசாரணைக்கு அழைத்தனா். ஆனால், விசாரணைக்கு செல்லாமல் ராதாகிருஷ்ணன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலீஸாா் அவரது வீட்டுக்கு சென்று ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதம் (41) மற்றும் மகன் சுந்தா் (23) ஆகியோரிடம் தொடா்ந்து விசாரணை செய்து வந்தனராம்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான மரகதம், வியாழக்கிழமை வீட்டில் பூச்சி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றாா். பின்னா் அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதனிடையே, ராதாகிருஷ்ணன் ஒசூரைச் சோ்ந்த ஒரு நபரை பணத்துக்காக கடத்திச் சென்ாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில், மரகதம் மற்றும் சுந்தா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனராம். இதன் அடிப்படையிலேயே, மரகதம் பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது.