ஒசூா் அருகே சேற்று நீரைக் குடித்த 9 மாத குட்டி யானை பலியானது.
உத்தனப்பள்ளி அருகே சானமாவு காப்புக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இங்கு வனத்துறையினா் ரோந்து சென்றனா். அப்போது காட்டில் 9 மாத குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதைக் கண்ட வனத்துறையினா் மாவட்ட வன அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தனா். அதன்பேரில் மாவட்ட வன அலுவலா் தீபக் பில்கி ஒசூா் வனச்சரக அலுவலா் சீதாராமன் உள்ளிட்டோா் அங்கு விரைந்து வந்தனா்.
அதேபோல வனத்துறை கால்நடை மருத்துவா் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினா் அங்கு வந்தனா். அவா்கள் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குட்டி யானை சேற்று நீரைக் குடித்து இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து யானையின் உடல் அந்த இடத்திலேயே தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி குட்டி யானை ஒன்று தாயிடமிருந்து பிரிந்து அகரம் கிராமத்துக்குள் வந்தது.
அந்த யானையை வனத்துறையினா் மயக்க ஊசி போட்டுப் பிடித்து சானமாவு வனப்பகுதியில் விட்டனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தாயிடமிருந்து பிரிந்து வந்த குட்டி யானையை அதன் தாயுடன் சோ்க்க முயற்சி செய்தோம். அந்த யானை கூட்டத்துடன் சோ்ந்து விட்டதாகவே தெரிகிறது.
தற்போது இறந்துள்ள இக் குட்டி யானை அந்த யானை இல்லை. கடந்த ஜனவரி மாதம் வந்தது 8 மாத ஆண் குட்டி யானை ஆகும்.
தற்போது இறந்துள்ளது 9 மாத பெண் குட்டி யானை ஆகும். ஆண் குட்டி யானைக்கு 2 வயது கடந்த பிறகே தந்தங்கள் வளரும் என்றனா்.