தேன்கனிக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவசாயிக்கு, கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த 6 வயது சிறுமி, வீட்டின் அருகே 2018 ஆக. 31-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளியை அடுத்த எச்.செட்டிப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி மஞ்சு (எ) மஞ்சுநாத் (35), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மஞ்சுநாத்தைக் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீா்ப்பை வெள்ளிக்கிழமை வாசித்தாா். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவசாயி மஞ்சுநாத்துக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.