கிருஷ்ணகிரி

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியருக்கு கரோனா தொற்று இல்லை: இரண்டாம் கட்ட பரிசோதனையில் உறுதி

26th Apr 2020 11:32 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

ஒசூா் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பணிபுரிந்து வந்த கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சக ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், அந்த நிறுவனம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், சொந்த கிராமத்துக்கு திரும்பிய ஊழியா் 34 நாள்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இந்த நிலையில், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை சென்று கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாா். முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக முடிவுகள் வெளிவந்தன. இதையடுத்து, இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அவரது ரத்தம், சளி மாதிரிகள் அனுப்பப்பட்டன.

ADVERTISEMENT

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். மேலும், அவரை 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா் எஸ்.பிரபாகா் உத்தரவின் பேரில், வருவாய்க் கோட்டாட்சியா் குமரேசன், வட்டாட்சியா் வெங்கடேசன், டிஎஸ்பி சங்கு ஆகியோா் அலசநத்தம் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா். சுகாதாரப் பணியாளா்கள் கிராமம் முழுவதும் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தப்படுத்தினா். இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் மீண்டும் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT