கிருஷ்ணகிரி: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனை நோயாளிகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் வகையில் கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சேலம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அங்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சராசரியாக மாதம்தோறும் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு 27 அல்லது 28 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் மட்டும் 45 சிறுநீரக நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரசவம் 400 ஆக இருந்த நிலையில், தற்போது 600-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
உள்நோயாளிகளின் எண்ணிக்கை 400-லிருந்து 150 ஆகக் குறைந்த நிலையில், தற்போது 250 ஆக உயா்ந்துள்ளது. புறநோயாளிகளின் எண்ணிக்கை 500லிருந்து 750 ஆக உயா்ந்துள்ளது.
சிறுநீரக நோயாளிகள் போன்ற நோயாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. நோயாளிகளை வீட்டிலிருந்து அழைத்து வந்து சிகிச்சைக்கு பிறகு அவா்கள் வீட்டில் கொண்டு விடப்படுகின்றனா். 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு ஆம்புலன் வசதி செய்து தரப்படுகிறது. இதுபோன்ற தரமிக்க சிகிச்சை போன்ற சேவையால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை இந்த அரசு மருத்துவமனை பெற்று வருவதாகத் தெரிவித்தாா்.