கிருஷ்ணகிரி

வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆட்சியர்

17th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

பள்ளி செல்லா வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பில் ராஷ்ட்ரிய போஷான் இயக்கம் 2019 என்ற பிரசார வாகன மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் கொடியசைத்து திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது, அவர் தெரிவித்தது: தேசிய ஊட்டச்சத்து மாதமான செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம்பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்தல் மற்றும் வளர்ச்சி கண்காணிக்கப்படும். சுத்தமான காய்கறிகள் அடங்கிய வீட்டுத் தோட்டங்களை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் அமைத்துக் கொடுத்தல், ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நாள் அனுசரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 செப்.22 முதல் 24-ஆம் தேதி வரையில் உணவு செயல்முறை விளக்கக் கூட்டங்களை நடத்தி, உணவு மாதிரிகளைக் காட்சிப்படுத்துதல், சிறு தானிய உணவு வகைகள் சமைத்தல் போட்டி நடத்தப்படும். பள்ளி, கல்லூரிகளில் ஊட்டச்சத்து தொடர்பான விளக்கக் கூட்டங்கள் நடத்தி, உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும். பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச் சத்து சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
 இந்தப் பேரணியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) நல்லசிவம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், கண்காணிப்பாளர் வெங்கடாசலபதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT