கிருஷ்ணகிரி

தரமான பருத்தி விதைகளை பயன்படுத்த அறிவுரை

7th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

தரமான பருத்தி விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ச.எலிசபத்மேரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள பருவமழைக்கு விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள தரமான நல்ல விதைகளை தேர்வு செய்து, நடவுக்கு பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ரக பருத்தி, வீரிய பருத்தி, பீ.டி. பருத்தி  விதைகளை வாங்கும்போது, விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கப்படும் விதைகளுக்கு கட்டாயம் உரிய விற்பனை ரசீதை கேட்டு பெற்றுக் கொள்ளவேண்டும்.
தமிழகத்துக்கு பீ.டி. பருத்தி விதைகளை ஒதுக்கீடு செய்யாத நிறுவனங்களின் விதைகளை, பிற மாநிலங்களில் இருந்து வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். பருத்தி ரகத்தின் விவர அட்டையில் பயிர் செய்ய உகந்த பருவம், உகந்த மாநிலம் போன்ற விவரங்களை சரிபார்த்து வாங்கவும். மேலும், தாங்கள் வாங்கும் பருத்தி விதை குவியலுக்குரிய முளைப்புத்திறன் பற்றிய அறிக்கையினை கேட்டு சரிபார்க்கவும். விதை முளைப்புத்திறன் அறிய விரும்பும் பட்சத்தில், விதை விவரங்களுடன் ஒரு மாதிரிக்கு, ரூ.30 என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, விதைகளின் தரத்தினை அறிந்து, தரமான பருத்தி விதைகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT