கிருஷ்ணகிரி

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: ஆட்சியர் சு.பிரபாகர்

4th Sep 2019 09:30 AM

ADVERTISEMENT

நீர்நிலைகள் தூர்வாரப்படுவதற்கு முன்பாக, நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் அறிவியல் மையம் சார்பில், நீர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான உழவர் திருவிழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் விழாவைத் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.செல்லகுமார், நீர் மேலாண்மைத் திட்ட பார்வையாளர் சரவணன், விஞ்ஞானி ஆதிரா, வேளாண் அறிவியல் மையத் தலைவர் டி.சுந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 விழாவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.செல்லகுமார் பேசியது: கடந்த காலங்களில் நீர் மேலாண்மை குறித்து தமிழர்களுக்கு போதிய அறிவு இருந்துள்ளது. குடிமராமத்துப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். தற்போது, நிறைவேற்றப்படும் குடிமராமத்துப் பணிகளை அதுபோன்று நிறைவேற்ற வேண்டும். குடிமராமத்துப் பணிகளில் விவசாயிகள், பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றார்.
 மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின்கீழ் 100 ஏரிகளுக்கு தூர்வார சராசரியாக ரூ.5 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், 325 குளம், குட்டைகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சார்பில் 150 ஏரிகளும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
 ஒசூர் நகரைச் சுற்றி உள்ள 17 ஏரிகளில், 11 ஏரிகள் நல்ல முறையில் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் தூர்வாரப்படுவதைப் போல, நீர்வழி கால்வாய்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஒசூர் அருகே, 12 ஏக்கர் பரப்பளவில் ஏரி உருவாக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
 முன்னதாக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், நீர் மேலாண்மை குறித்த கையேட்டை வெளியிட மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.செல்லகுமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.10.46 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT