கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே மின்வேலியில் சிக்கி காட்டெருமை பலி: 2 பேர் கைது

4th Sep 2019 09:24 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை அருகே மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்தது. இது தொட ர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இருதுகோட்டை அருகே உள்ள எஸ்.பாளையம் கிராமத்தின் அருகில் பத்மாவதி என்பவருக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெரியானூர் அருகே உள்ள செட்டிப்பட்டியைச் சேர்ந்த முனியன் (43), அத்திமுட்லு பகுதியைச் சேர்ந்த சித்தார்த் (38) ஆகியோர் தினக்கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
 இந்தப் பண்ணையைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சோலார் மூலமாக குறைவாக மின்சாரம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை சோலார் மின்சாரத்துக்கு பதிலாக நேரடியாக மின்சாரத்தை வேலியில் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
 அப்போது காப்புக் காட்டில் இருந்து பண்ணைக்கு வந்த ஒரு காட்டெருமை எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், காட்டெருமை இறந்து கிடந்ததைப் பார்த்து மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், வனச் சரகர் சுகுமார், வனவர் கதிரவன், வனக் காப்பாளர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு சென்று பண்ணையில் பணிபுரிந்துவந்த முனியன், சித்தார்த் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வனத்துறை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் சென்று காட்டெருமையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து காட்டெருமையின் உடல் புதைக்கப்பட்டது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT