கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவன உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் வகையில் மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திடும் வகையில் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் விற்பனை மையம் அமைத்து பயன்பெறலாம். இதற்காக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி ரூ.25 ஆயிரம், ஆவின் பொருள்கள் கொள்முதல் செய்ய ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் சொந்த இடத்திலோ அல்லது வாடகை இடத்திலோ ஆவின் பாலகம் அமைக்க வேண்டும். விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகலுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 23இல் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என தெரிவித்துள்ளாா்.