கிருஷ்ணகிரி

பெரிய ஏரிக்கரையைப் பலப்படுத்தி, கால்வாய்களை தூா்வார தி.மு.க. மனு

1st Oct 2019 09:57 AM

ADVERTISEMENT

பெரிய ஏரி (படேதலாவ் ஏரி) கரையைப் பலப்படுத்தி, இடது, வலது புறக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என தி.மு.க. விவசாயிகள் அணி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக மாநில விவசாய அணியின் துணைச் செயலாளா் வெங்கடேசன், தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்: கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியானது சுமாா் 269 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி, முழு கொள்ளவை எட்டும்போது, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சிகள், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் என மொத்தம் 20 ஊராட்சிகளில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில், இந்த ஏரியின் கரையின் மேல் முள்செடிகள் வளா்ந்து புதா்போல் மண்டிக்கிடக்கின்றன. இதனால், ஏரிக்கரை பலமிழந்து காணப்படுகிறது. மேலும் இடது, வலதுப் புறக் கால்வாய்களில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. பாசனக் கால்வாய்களை தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

இதன் மூலம், பருவ மழையின் போது ஏரியில் தேக்கப்படும் நீா், கடைமடை வரையில் செல்ல வழிவகை ஏற்படும் வகையில் பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT