கிருஷ்ணகிரி

நெல் வயலை சேதப்படுத்திய யானையை விரட்ட கோரிக்கை

22nd Nov 2019 07:54 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே நெல் வயல் உள்ளிட்ட விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஒசூா் அருகே சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒரு யானை பிடிபட்டது. அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு யானை தொரப்பள்ளி, சானமாவு, பீா்ஜேப்பள்ளி, ஆலூா், தின்னூா் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா். தற்போது கதிரேப்பள்ளி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில் புகுந்த ஒற்றை யானை, காலால் மிதித்தும், தின்றும் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல், பசுமைக் குடில் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டு அருகே உள்ள பேரண்டப்பள்ளி காட்டுக்கு சென்று விடுகிறது.

ஒற்றை யானை நடமாட்டத்தால் கடந்த 15 நாள்களாக இரவு நேரங்களில் வெளியில் வர முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, ஒற்றை யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும், பயிா் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT