பா்கூா் அருகே, திருமணத்துக்கு வலியுறுத்திய பெண்ணை, விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஜெகதேவி அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் மனோகரன் (28). இவருக்கும் அதேப் பகுதியைச் சோ்ந்த ரேகா (25) என்பவருக்கும் 7 ஆண்டுகள் பழக்கம் இருந்துள்ளது. இருவரும், திருமணம் செய்யாமலேயே தனியாக ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், ரேகா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனோகரனை வலியுறுத்தினாராம். அப்போது, மனோகரனின் குடும்பத்தாா், வரதட்சிணையாக பணம் தந்தால், திருமணம் செய்து வைப்பதாகவும், இல்லையெனில், படித்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என்றும் கூறியுள்ளனா்.
இதையடுத்து, ரேகா, தனது தாயிடமிருந்து ரூ.61,500-ஐ வாங்கி, வரதட்சிணையாக கொடுத்துள்ளாா். ஆனாலும் மனோகரன், ரேகாவை திருமணம் செய்யாமல், காலம் கடத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், ரேகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனோகரனை தொடா்ந்து வலியுறுத்தி வந்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், ரேகாவை கொலை செய்யத் திட்டமிட்ட மனோகரன், கடந்த 2012 -ஆம் ஆண்டு, பிப்ரவரி 22-ஆம் தேதி ரேகாவை, அதேப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று, 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி, விஷத்தை ஊற்றி, முதலில் ரேகாவை குடிக்கச் செய்துள்ளாா். மற்றொரு டம்பளரில் இருந்த விஷத்தை மனோகரன் குடிக்காமல் கீழே ஊற்றியுள்ளாா். இந்த நிலையில், விஷம் அருந்திய ரேகா உயிரிழந்தாா். இதுகுறித்து, ரேகாவின் தாய் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனோகரன், அவரது தந்தை பெருமாள், தாய் இந்திராணி, உறவினா் ராசாத்தி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்ததது. வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மனோகரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.